Saturday, February 12, 2011

இராமாயணம் - அத்தியாயம் 2 - புத்திர சந்தானம்


ரிஷ்யசிருங்கள் வேள்வித்தீயில் ஆகுதி விட, நெய்யை உண்டு எரியும் தீயில் சூரியனைப் போல் பிரகாசத்துடன் கூடிய ஒரு தேவகுமாரன் ஒருவன் கையில் பாயசம் நிரம்பிய ஒரு பாத்திரத்துடன் தோன்றி அப்பாத்திரத்தை தசரத மன்னனிடம் தந்து, பாயசத்தை அவன் மனைவியருக்குக் கொடுக்கும் படியாகவும் பாயசத்தை உண்டபின்னர் அவர்களுக்குப் புத்திர சந்தானம் ஏற்படும் எனவும் அருளினான். அளவிலா மகிழ்ச்சியுடன் பாத்திரத்தைப் பெற்ற தசரதன் அதனைத் தன் மனைவியரிடம் தர, அதனை பயபக்தியுடன் வாங்கிப் பருகி உரிய காலத்தில் கருத்தரித்தனர்.

காலக்கிரமத்தில் கோசலை ஸ்ரீராமனை மகனாகப் பெற்றாள். அடுத்து கைகேயி பரதனைப் பெற்றாள். சுமத்திரை இரட்டையர்களாக லக்ஷ்மணனையும் சத்துருக்கனனையும் பெற்றாள். நான்கு குமாரர்களும் உரிய காலத்தில் குல குருவான வசிஷ்டரிடம் கல்வி பயின்றதுடன் அரச குமாரர்களுக்குரிய ஏனைய பயிற்சிகளையும் பெற்றனர். நான்கு புத்திரர்களுடன் தசரத மன்னன் தேவர்களால் சூழப்பட்ட நான்முகக் கடவுளைப் போல் சந்தோஷமாக வாழ்ந்து வந்தான்.

இவ்வாறிருக்கையில் ஒரு நாள் மன்னன் தன் மந்திரிமார்களுடன் அரச குமாரர்களுக்கு விவாஹம் செய்வதைப் பற்றிய ஆலோசனையில் ஈடுபட்டிருக்கையில் மன்னனைக் காண விஸ்வாமித்திர முனிவர் வருகை தந்தார். அவரை வரவேற்று வணங்கி உபசரித்த தசரதன் அவருக்குத் தன்னால் என்ன உதவி செய்ய இயலுமென வினவினான். அவர் வேண்டிய உதவியைத் தவறாமல் செய்வதாகவும் வாக்களித்தான்.

மன்னனது உபசரிப்பில் மகிழ்ந்து அவன் தனக்கு உதவுவதாக வாக்களித்ததற்கு நன்றி கூறி விஸ்வாமித்திரர் கூறலானார். "மன்னா, நியமம் பூண்டு நான் ஆரம்பித்து நடத்தும் வேள்வி முடியும் தருவாயில் மாரீசன், சுபாஹூ எனும் அரக்கர்கள் இருவர் வேள்வித்தீயில் மாமிசமும் ரத்தமும் பொழிந்து வேள்வியைக் கெடுத்து வருகின்றனர். தேகபலமும் வீரியமும் யுத்தப் பயிற்சியும் பெற்ற அவர்களை நானும் மற்ற மகரிஷிகளும் சாபமிட்டு அடக்க முடியும் ஆனால் அதனால் தவம் வீணாகும். எனவே அவ்வரக்கர்களை அழித்து யாகத்தைக் காக்க உனது மூத்த மகனான இராமனை என்னுடன் அனுப்பித் தருவாயாக. அவனது வீரத்தால் எங்களது கஷ்டம் நீங்குவதுடன் என்னுடைய பாதுகாப்பின் அவனது வீரமும் பலமும் பெருகி இவ்வரக்கர்களை அழித்துப் பெரும் புகழ் பெறுவான். நான் கேட்டதற்கு முன்பே நீ எனக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி ஸ்ரீராமனை என்னுடன் அனுப்பித் தருவீராகில் மூவுலகத்திலும் பெரும் புகழடைவாய்." என்று கேட்டார்.

முனிவர் வருகையால் பெருமகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்த தசரதன் அவர் தன் உயிரிலும் மேலான ராமனைத் தன்னை விட்டுப் பிரித்து அழைத்துச் செல்ல விரும்புவதைக் கேட்டதும் பெரும் கவலையில் ஆழ்ந்தான். அருமைப் புத்திரனை அரக்கர்களுக்குப் பலி கொடுக்க நேருமோ என அஞ்சினான். எனவே பெரிதும் தயக்கத்துடன் முனிவரைப் பார்த்து, "பதினாறு வயது பூர்த்தியாகத
ராமன் ராக்ஷசர்களோடு யுத்தம் புரிந்து வெல்வானா என எனக்கு சந்தேகமாக உள்ளது. தங்களது வேள்வியைப் பாதுகாக்க நான் எனது படையுடன் வருகிறேன். அரக்கர்கள் மாயாவிகள். அவர்கள் புரியும் சூதும் வாதும் நிறைந்த மாய யுத்தத்தில் எதிர்நின்று போரிடும் வலிமையை ராமன் அடைந்திருப்பான் என நான் எண்ணவில்லை." என்று மறுத்துப் பேசினான்.

விஸ்வாமித்திரர் மீண்டும் மாரீசன், சுபாஹூ ஆகியவர்களைப் பற்றியும் அவர்களது எஜமான் இராவணனைப் பற்றியும் எடுத்துக் கூறி அவர்களை வெல்லக்கூடியவன் உலகில் ஸ்ரீராமன் ஒருவனே எனத் தெரிவித்து அவனைத் தன்னுடன் அனுப்ப வேண்டினார். புத்திரனைப் பிரிய மனமில்லாத தசரதன் மீண்டும், "தவமிருந்து பெற்ற என் மகன் ராமனைப் பிரிந்தான் என் உயிர் போய் விடும். வேண்டுமானால் நான் உங்களுடன் வருகிறேன்." என்று மறுத்துப் பேசவே பெருங்கோபம் கொண்ட

விஸ்வாமித்திர முனிவர், "மன்னா, முதலில் நான் வேண்டுவனவெல்லாம் தருகிறேன் என வாக்களித்து விட்டுப் பின்னர் அதை மறுத்துப் பேசுவது முறையல்ல. இத்தகைய நடவடிக்கை நீ பிறந்த இஷ்வாகு குலத்துக்குத் தகாது. இதுவே உன் முடிவாயின் நான் வந்த வழியே திரும்புகிறேன். வாக்குத் தவறியவன் என்ற பழிச்சொல்லுடன் நீ வாழ்வாயாக!" என்று கூறிவிட்டுத் திரும்ப யத்தனித்தார்.
.

Monday, November 29, 2010

இராமாயணம் - அத்தியாயம் 1 - தசரதன்

தசரத மன்னன்

மனு எனும் புகழ்பெற்ற சூரியகுல அரசனால் நிர்மாணிக்கப்பட்டது கங்கை நதிக்கு வடக்கே சரயுநதி பாய்ந்து செழிப்புற்ற விசாலமான கோசல தேசம். இத்தேசம் இருந்த பகுதி தற்கால இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலமாகும். கோசல நாட்டை மனுவின் வழியே வந்துதித்த தசரத சக்கரவர்த்தி ஆண்ட காலத்தின் வரலாறே இராமாயணமாக அறியப்படுகிறது. தசரதன் தேவர்களுக்காக யுத்தம் புரிந்தவன். பூலோகம், தேவலோகம், பாதாளலோகம் ஆகிய மூன்று உலகங்களிலும் புகழ்பெற்றவன்.  கோசல நாட்டின் தலைநகரம் அயோத்தி. வேற்று நாட்டவர் யாரும் யுத்தத்தில் வெல்ல முடியாத நகரம் என்று இதற்குப் பொருள். அத்துணை பாதுகாப்பாக நிர்மாணிக்கப்பட்ட நகரமாக அயோத்தி விளங்கியது.

தசரதனுக்கு கோசலை, கைகேயி, சுமத்திரை என மூன்று மனைவியர் இருந்தனர். அக்காலத்தில் அரசகுலம் தழைக்கப் புத்திர பாக்கியம் இன்றியமையாததாகக் கருதப்பட்டதால் மன்னர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை அடைந்து வாழ்வது மிகவும் சகஜமான நடைமுறையாக இருந்தது. மூன்று மனைவியர் இருந்து வெகுகாலமாக தசரத மன்னனுக்குப் புத்திர பாக்கியம் இல்லாத குறை அவன் மனதை வாட்டியது. இந்நிலையில் இக்குறையை நீக்க வேண்டி குருக்களின் அறிவுரைப்படி மன்னவன் தசரதன் ரிஷ்யசிருங்க முனிவரை வரவழைத்து அவரைக்கொண்டு அசுவமேதயாகமும் புத்திரகாமேஷ்டி யாகமும் செய்தான். யாகம் என்பது வடமொழிச் சொல். இதற்குரிய தமிழ்ச்சொல் வேள்வி என்பதாகும்.

அக்காலத்தில் வேள்வி செய்வதென்றால் அது மிகவும் பிரம்மாண்டமான ஏற்பாடுகளுடன் செய்யப்பட வேண்டும். பல தேசத்து மன்னர்களுக்கும் அழைப்பு விடுத்து அவர்களது பரிவாரங்கள் புடைசூழ அவர்கள் வந்து பல நாட்கள் தங்கியிருந்து வேள்வியில் கலந்து கொள்ள மாளிகைகளும் இருப்பிடங்களும் கட்டித் தந்து அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான இதர வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். முனிவர்களையும் அவர்கள் செய்யும் வேள்விச் சடங்குகளுக்கு உதவி புரிபவர்களையும் வரவழைத்து யாகம் செய்யத் தக்க அளவில் யாகமேடை அமைத்து யாகத்துக்குரிய பொருட்களையும் பிற ஏற்பாடுகளையும் விமரிசையாகச் செய்ய வேண்டும். பிற நாடுகளிலிருந்தும் தேசத்தின் பிற பகுதியிலிருந்தும் யாகத்தைக் காண வருவோர்கள் அனைவருக்கும் தக்க நேரத்தில் உணவளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அத்துடன் பலவிதமான கேளிக்கைகளுக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

யாகக்குதிரை ஒன்றைத் தயார் செய்து அத்துடன் ஒரு வீரர் படையைப் பல நாடுகளுக்கு அனுப்ப வேண்டும். யாகக்குதிரையும் படை வீரர்களும் பிற நாடுகளின் மன்னர்களால் அங்கீகரிக்கப்பட்டு வெற்றியுடன் திரும்பி வந்தவுடன் யாகம் துவங்க வேண்டும். அங்கீகாரம் தர மறுக்கும் பிற மன்னர் யாரேனும் யாகக்குதிரையைக் கட்டிப்போட்டால் அவர்களுடன் யுத்தம் புரிந்து குதிரையை மீட்டு வர வேண்டும்.

தசரத மன்னனின் ஆணைப்படி வேள்வி செய்ய அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு யாகம் ஆரம்பிக்கப்பட்டது. இது இவ்வாறிருக்க தேவலோகத்தில் நான்முகக் கடவுளான பிரம்மாவை நோக்கி தேவர்கள் இலங்கேஸ்வரன் இராவணனால் தாம் மிகவும் துன்பப்படுவதை எடுத்துரைத்து, தங்களைக் காக்க வழிகூற வேண்டுமென முறையிட்டனர். இராவணன் சிவபக்தன். பெரும் தவம் செய்து தேவ கந்தர்வ ராக்ஷசர்களால் மரணமடையாதிருக்க பிரம்மாவிடம் வரம் பெற்றவன். பெற்ற வரத்தின் பலத்தாலும் ஆணவத்தாலும் அவன் எல்லோரையும் அவமதித்தும் கொடுமை செய்தும் வந்தான். அவனது கொடுமைக்கு ஒரு மிடிவை பிரம்மாவே சொல்ல வேண்டுமென தேவர்கள் இறைஞ்ச பிரம்மதேவன், "வரம் கேட்கையில் இராவணன் மனிதரைப் பற்றியும் விலங்குககளைப்பற்றியும் குறிப்பிட மறந்துவிட்டான். இதனால் இவனை வதம் செய்ய மஹாவிஷ்ணு மானுடராக அவதாரம் செய்தாலே இயலும் என்று கூறவே தேவர்கள் அனைவரும் மஹாவிஷ்ணுவைச் சரணடைந்தார்கள். தங்களுக்காக மானுடராக அவதாரம் எடுத்து இராவணனைக் கொன்று தங்களைக் காக்க வேண்டினர். நாராயணனும் தேவர்களுக்காக மனம் இரங்கி புத்திரபாக்கியம் வேண்டி யாகம் செய்யும் தசரதனுக்கு நான்கு குமாரர்களாக அவதரித்து, இராவணனைக் கொன்று தேவர்களுக்கு விடுதலை பெற்றுத் தருவதாக வரமளிக்கவே தேவர்கள் மிகவும் மகிழ்ந்து இறைவனைத் துதித்து வணங்கினர்.

ஆகிரா

Saturday, November 27, 2010

இராமாயணம் - முன்னுரை:

பள்ளியில் பயிலும் காலத்தில் பத்து வயதுச் சிறுவனாக இருக்கையில் என் தந்தை எனக்கு மூதறிஞர் எழுதிய சக்கரவர்த்தித் திருமகன், வியாசர் விருந்து ஆகிய இரு நூல்களை வாங்கித் தந்தார். அவ்விரு நூல்களும் முறையே ராமாயணம் மஹாபாரதம் ஆகியவற்றின் தமிழ் வடிவமே ஆகும். சக்கரவர்த்தித் திருமகன் என்ற நூல் தற்போது இராமாயணம் என்றும், வியாசர் விருந்து என்ற நூல் மஹாபாரதம் என்றும் பெயர் மாற்றம் செய்யப் பட்டு இராஜாஜி அவர்கள் எழுதிய கதையில் எவ்வித மாற்றமும் செய்யப் படாமல் விநியோகம் செய்யப் படுகின்றன.

இவ்விரு நூல்களையும் நான் இளம் வயது முதற்கொண்டே பல நூறு முறைகள் திரும்பத் திரும்பப் படித்திருக்கிறேன், காரணம் அவற்றில் பொதிந்து கிடக்கும் அரிய கருத்துக்களும், மிகுந்த விஷய ஞானம் தரவல்ல செய்திகளும், அக்கதைகளை இராஜாஜி எடுத்துரைத்த சுவாரஸ்யமான விதமுமே ஆகும்.

இவற்றை இணையதள வாசகர்களுக்கு எனக்குத் தெரிந்த வகையில் எடுத்துரைக்கும் வாய்ப்பை அருளிய இறைவனுக்கும், என்னுடன் இணைந்து மழலைகள்.காம், இந்திய மக்கள், இளம் புலவர் உட்பட்ட இணையதளங்களை நடத்தப் பேருதவி புரியும் மழலைஸ் ஆசிரியர் குழுமம் ஆசிரிய நண்பர்களுக்கும்என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு ஸ்ரீ ராமபிரானின் திருக்கதையை எழுத விழைகிறேன். ராமதூதனாகிய ஆஞ்சனேயனின் அருளை வேண்டிக் கதையைக் கூற ஆரம்பிக்கிறேன்.

இராமாயண காவியத்தை எழுதியவர் வால்மீகி முனிவர். இக்காவியத்தை இவர் எழுதிய காலத்திலேயே இராமபிரான் இவ்வுலகில் அவதரித்து வாழ்ந்ததாக ஒரு நம்பிக்கை புராணம் வாசிபவர்களிடையே நிலவுகிறது. ஆராய்ச்சியாளர்கள் கருத்துப்படி ஸ்ரீ ராமன் கதை வால்மீகி முனிவர் வாழ்ந்த காலத்துக்கு முன்பே பல நூற்றாண்டுகளாக மக்களிடையே வாய்மொழியாக
வழங்கி வந்ததாகத் தெரிகிறது. அதனையே வால்மீகி முனிவர் சமஸ்கிருதம் எனும் வட மொழியில் ஸ்லோகங்களாக எழுதி வைத்தார் என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து. எவ்வாறாயினும் கதையை எடுத்துரைக்கையில் இதனை மூதறிஞர் ராஜாஜி அவர்களின் கருத்துக்களுக்கொப்பவே கூற விரும்புகிறேன்.

இராமாயணம் உருவான கதை:

ஒரு நாள் வால்மீகி ரிஷியின் ஆசிரமத்துக்கு நாரதர் வர, அவரை வரவேற்று உபசரித்த ரிஷி நாரதரிடம் இவ்வுலகில் எல்லா நற்குணங்களும் அறிவும் பெற்ற உத்தம வீரன் யாரெனக் கேட்க நாரதர், அயோத்தியில் அரசுபுரிந்து வரும் சூரியகுலத்தைச் சேர்ந்த ஸ்ரீ ராமனே அத்தகைய வீரன் என்று கூறிவிட்டு ராம சரித்திரத்தைச் சுருக்கமாக விளக்கிச் சொன்னார்.

நாரதர் விடைபெற்றுச் சென்ற பிறகு ஆற்றங்கரைக்குப் போய்க் குளிக்க இடம் பார்த்துக் கொண்டிருந்த முனிவர் ஸ்ரீ ராமனைப் பற்றிய தியானத்திலேயே இருக்கையில் மரக்கிளையில் விளையாடிக் கொண்டிருந்த ஆணும் பெண்ணூமான இரண்டு கிரவுஞ்ச பட்சிகளுள் ஆண் பறவையை எங்கிருந்தோ ஒரு வேடன் அம்பெய்து கொன்றான். தன் காதலன் இறந்து விழுந்தது கண்ட பெண் பறவை அலறித் துடிப்பதைக் கண்ட முனிவர் தன்னையுமறியாது ஏற்பட்ட கோபத்தில், "அடே பாபி, இப்பாபச் செயலைச் செய்த நீ எவ்வளவு காலமானாலும் இருக்க இடமின்றி அலையக் கடவாய்" என்று வேடனைச் சபித்து விட்டார்.

ஆவர் மொழிந்த சாப மொழிகள் ஓர் அற்புத நாதத்தோடு அவருடைய காதுகளிலே தொனிக்கவே ரிஷி மிக வியப்படைந்தார். பறவைகளின் துன்பத்தைக் கண்டு சகியாமல் கருணையால் கோபம் எழ, அது சாப உருவம் கொண்டு ஓர் அருமையான பாட்டாக அமைந்ததை எண்ணி ஆண்டவன் திருவிளையாடலே இது என உணர்ந்து தியானத்தில் அமர்ந்தார் ரிஷி. இந்நிலையில் நான்முகக் கடவுள் பிரம்மா அவர் முன் தோன்றி,

ராம சரித்திரத்தை எழுதும் முறையை அவருக்குக் காட்டவே இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறி, ராமாயணத்தைப் பாடி உலகுக்கு அளிக்கும் திறமையை அருளிச் சென்றார். அதன் பின்னர் தன் சீடர்களுடன் சேர்ந்து வேடனைக் குறித்துச் சொன்ன சாப மொழிகளைத் திரும்பத்திரும்பக் கூறி அந்தச் சந்தத்தில் இராமாயணத்தைப் பூரணமாகப் பாடித் தன் சீடர்களுக்கும் கற்பித்தார்.

அன்புடன் ஆகிரா