பள்ளியில் பயிலும் காலத்தில் பத்து வயதுச் சிறுவனாக இருக்கையில் என் தந்தை எனக்கு மூதறிஞர் எழுதிய சக்கரவர்த்தித் திருமகன், வியாசர் விருந்து ஆகிய இரு நூல்களை வாங்கித் தந்தார். அவ்விரு நூல்களும் முறையே ராமாயணம் மஹாபாரதம் ஆகியவற்றின் தமிழ் வடிவமே ஆகும். சக்கரவர்த்தித் திருமகன் என்ற நூல் தற்போது இராமாயணம் என்றும், வியாசர் விருந்து என்ற நூல் மஹாபாரதம் என்றும் பெயர் மாற்றம் செய்யப் பட்டு இராஜாஜி அவர்கள் எழுதிய கதையில் எவ்வித மாற்றமும் செய்யப் படாமல் விநியோகம் செய்யப் படுகின்றன.
இவ்விரு நூல்களையும் நான் இளம் வயது முதற்கொண்டே பல நூறு முறைகள் திரும்பத் திரும்பப் படித்திருக்கிறேன், காரணம் அவற்றில் பொதிந்து கிடக்கும் அரிய கருத்துக்களும், மிகுந்த விஷய ஞானம் தரவல்ல செய்திகளும், அக்கதைகளை இராஜாஜி எடுத்துரைத்த சுவாரஸ்யமான விதமுமே ஆகும்.
இவற்றை இணையதள வாசகர்களுக்கு எனக்குத் தெரிந்த வகையில் எடுத்துரைக்கும் வாய்ப்பை அருளிய இறைவனுக்கும், என்னுடன் இணைந்து மழலைகள்.காம், இந்திய மக்கள், இளம் புலவர் உட்பட்ட இணையதளங்களை நடத்தப் பேருதவி புரியும் மழலைஸ் ஆசிரியர் குழுமம் ஆசிரிய நண்பர்களுக்கும்என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு ஸ்ரீ ராமபிரானின் திருக்கதையை எழுத விழைகிறேன். ராமதூதனாகிய ஆஞ்சனேயனின் அருளை வேண்டிக் கதையைக் கூற ஆரம்பிக்கிறேன்.
இராமாயண காவியத்தை எழுதியவர் வால்மீகி முனிவர். இக்காவியத்தை இவர் எழுதிய காலத்திலேயே இராமபிரான் இவ்வுலகில் அவதரித்து வாழ்ந்ததாக ஒரு நம்பிக்கை புராணம் வாசிபவர்களிடையே நிலவுகிறது. ஆராய்ச்சியாளர்கள் கருத்துப்படி ஸ்ரீ ராமன் கதை வால்மீகி முனிவர் வாழ்ந்த காலத்துக்கு முன்பே பல நூற்றாண்டுகளாக மக்களிடையே வாய்மொழியாக
வழங்கி வந்ததாகத் தெரிகிறது. அதனையே வால்மீகி முனிவர் சமஸ்கிருதம் எனும் வட மொழியில் ஸ்லோகங்களாக எழுதி வைத்தார் என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து. எவ்வாறாயினும் கதையை எடுத்துரைக்கையில் இதனை மூதறிஞர் ராஜாஜி அவர்களின் கருத்துக்களுக்கொப்பவே கூற விரும்புகிறேன்.
இராமாயணம் உருவான கதை:
ஒரு நாள் வால்மீகி ரிஷியின் ஆசிரமத்துக்கு நாரதர் வர, அவரை வரவேற்று உபசரித்த ரிஷி நாரதரிடம் இவ்வுலகில் எல்லா நற்குணங்களும் அறிவும் பெற்ற உத்தம வீரன் யாரெனக் கேட்க நாரதர், அயோத்தியில் அரசுபுரிந்து வரும் சூரியகுலத்தைச் சேர்ந்த ஸ்ரீ ராமனே அத்தகைய வீரன் என்று கூறிவிட்டு ராம சரித்திரத்தைச் சுருக்கமாக விளக்கிச் சொன்னார்.
நாரதர் விடைபெற்றுச் சென்ற பிறகு ஆற்றங்கரைக்குப் போய்க் குளிக்க இடம் பார்த்துக் கொண்டிருந்த முனிவர் ஸ்ரீ ராமனைப் பற்றிய தியானத்திலேயே இருக்கையில் மரக்கிளையில் விளையாடிக் கொண்டிருந்த ஆணும் பெண்ணூமான இரண்டு கிரவுஞ்ச பட்சிகளுள் ஆண் பறவையை எங்கிருந்தோ ஒரு வேடன் அம்பெய்து கொன்றான். தன் காதலன் இறந்து விழுந்தது கண்ட பெண் பறவை அலறித் துடிப்பதைக் கண்ட முனிவர் தன்னையுமறியாது ஏற்பட்ட கோபத்தில், "அடே பாபி, இப்பாபச் செயலைச் செய்த நீ எவ்வளவு காலமானாலும் இருக்க இடமின்றி அலையக் கடவாய்" என்று வேடனைச் சபித்து விட்டார்.
ஆவர் மொழிந்த சாப மொழிகள் ஓர் அற்புத நாதத்தோடு அவருடைய காதுகளிலே தொனிக்கவே ரிஷி மிக வியப்படைந்தார். பறவைகளின் துன்பத்தைக் கண்டு சகியாமல் கருணையால் கோபம் எழ, அது சாப உருவம் கொண்டு ஓர் அருமையான பாட்டாக அமைந்ததை எண்ணி ஆண்டவன் திருவிளையாடலே இது என உணர்ந்து தியானத்தில் அமர்ந்தார் ரிஷி. இந்நிலையில் நான்முகக் கடவுள் பிரம்மா அவர் முன் தோன்றி,
ராம சரித்திரத்தை எழுதும் முறையை அவருக்குக் காட்டவே இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறி, ராமாயணத்தைப் பாடி உலகுக்கு அளிக்கும் திறமையை அருளிச் சென்றார். அதன் பின்னர் தன் சீடர்களுடன் சேர்ந்து வேடனைக் குறித்துச் சொன்ன சாப மொழிகளைத் திரும்பத்திரும்பக் கூறி அந்தச் சந்தத்தில் இராமாயணத்தைப் பூரணமாகப் பாடித் தன் சீடர்களுக்கும் கற்பித்தார்.
அன்புடன் ஆகிரா
நல்ல ஆரம்பம், வாழ்த்துகள். உங்கள் வேலைகளுக்கு இடையில் இதையும் எழுத முடிஞ்சிருக்கு. அதை நினைச்சால் ஒரு பக்கம் ஆச்சரியமாயும், என் சோம்பேறித்தனத்தை நினைத்து இன்னொரு பக்கம் வெட்கமாயும் இருக்கு.
ReplyDeleteword verification தேவையா??? கமெண்ட் ஆப்ஷனிலேயே அனானியை எடுத்திருப்பீங்க தானே?? அப்புறம் இந்தத் தொடருவதற்கு உள்ள ஆப்ஷனும் கமெண்ட் கொடுக்கும்போதே வரும்படி மாத்திட்டா வசதி. அப்புறமா அதுக்காக இன்னொரு கமெண்ட் கொடுக்கணும்! :))))))))))
ReplyDelete