மனு எனும் புகழ்பெற்ற சூரியகுல அரசனால் நிர்மாணிக்கப்பட்டது கங்கை நதிக்கு வடக்கே சரயுநதி பாய்ந்து செழிப்புற்ற விசாலமான கோசல தேசம். இத்தேசம் இருந்த பகுதி தற்கால இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலமாகும். கோசல நாட்டை மனுவின் வழியே வந்துதித்த தசரத சக்கரவர்த்தி ஆண்ட காலத்தின் வரலாறே இராமாயணமாக அறியப்படுகிறது. தசரதன் தேவர்களுக்காக யுத்தம் புரிந்தவன். பூலோகம், தேவலோகம், பாதாளலோகம் ஆகிய மூன்று உலகங்களிலும் புகழ்பெற்றவன். கோசல நாட்டின் தலைநகரம் அயோத்தி. வேற்று நாட்டவர் யாரும் யுத்தத்தில் வெல்ல முடியாத நகரம் என்று இதற்குப் பொருள். அத்துணை பாதுகாப்பாக நிர்மாணிக்கப்பட்ட நகரமாக அயோத்தி விளங்கியது.
தசரதனுக்கு கோசலை, கைகேயி, சுமத்திரை என மூன்று மனைவியர் இருந்தனர். அக்காலத்தில் அரசகுலம் தழைக்கப் புத்திர பாக்கியம் இன்றியமையாததாகக் கருதப்பட்டதால் மன்னர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை அடைந்து வாழ்வது மிகவும் சகஜமான நடைமுறையாக இருந்தது. மூன்று மனைவியர் இருந்து வெகுகாலமாக தசரத மன்னனுக்குப் புத்திர பாக்கியம் இல்லாத குறை அவன் மனதை வாட்டியது. இந்நிலையில் இக்குறையை நீக்க வேண்டி குருக்களின் அறிவுரைப்படி மன்னவன் தசரதன் ரிஷ்யசிருங்க முனிவரை வரவழைத்து அவரைக்கொண்டு அசுவமேதயாகமும் புத்திரகாமேஷ்டி யாகமும் செய்தான். யாகம் என்பது வடமொழிச் சொல். இதற்குரிய தமிழ்ச்சொல் வேள்வி என்பதாகும்.
அக்காலத்தில் வேள்வி செய்வதென்றால் அது மிகவும் பிரம்மாண்டமான ஏற்பாடுகளுடன் செய்யப்பட வேண்டும். பல தேசத்து மன்னர்களுக்கும் அழைப்பு விடுத்து அவர்களது பரிவாரங்கள் புடைசூழ அவர்கள் வந்து பல நாட்கள் தங்கியிருந்து வேள்வியில் கலந்து கொள்ள மாளிகைகளும் இருப்பிடங்களும் கட்டித் தந்து அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான இதர வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். முனிவர்களையும் அவர்கள் செய்யும் வேள்விச் சடங்குகளுக்கு உதவி புரிபவர்களையும் வரவழைத்து யாகம் செய்யத் தக்க அளவில் யாகமேடை அமைத்து யாகத்துக்குரிய பொருட்களையும் பிற ஏற்பாடுகளையும் விமரிசையாகச் செய்ய வேண்டும். பிற நாடுகளிலிருந்தும் தேசத்தின் பிற பகுதியிலிருந்தும் யாகத்தைக் காண வருவோர்கள் அனைவருக்கும் தக்க நேரத்தில் உணவளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அத்துடன் பலவிதமான கேளிக்கைகளுக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
யாகக்குதிரை ஒன்றைத் தயார் செய்து அத்துடன் ஒரு வீரர் படையைப் பல நாடுகளுக்கு அனுப்ப வேண்டும். யாகக்குதிரையும் படை வீரர்களும் பிற நாடுகளின் மன்னர்களால் அங்கீகரிக்கப்பட்டு வெற்றியுடன் திரும்பி வந்தவுடன் யாகம் துவங்க வேண்டும். அங்கீகாரம் தர மறுக்கும் பிற மன்னர் யாரேனும் யாகக்குதிரையைக் கட்டிப்போட்டால் அவர்களுடன் யுத்தம் புரிந்து குதிரையை மீட்டு வர வேண்டும்.
தசரத மன்னனின் ஆணைப்படி வேள்வி செய்ய அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு யாகம் ஆரம்பிக்கப்பட்டது. இது இவ்வாறிருக்க தேவலோகத்தில் நான்முகக் கடவுளான பிரம்மாவை நோக்கி தேவர்கள் இலங்கேஸ்வரன் இராவணனால் தாம் மிகவும் துன்பப்படுவதை எடுத்துரைத்து, தங்களைக் காக்க வழிகூற வேண்டுமென முறையிட்டனர். இராவணன் சிவபக்தன். பெரும் தவம் செய்து தேவ கந்தர்வ ராக்ஷசர்களால் மரணமடையாதிருக்க பிரம்மாவிடம் வரம் பெற்றவன். பெற்ற வரத்தின் பலத்தாலும் ஆணவத்தாலும் அவன் எல்லோரையும் அவமதித்தும் கொடுமை செய்தும் வந்தான். அவனது கொடுமைக்கு ஒரு மிடிவை பிரம்மாவே சொல்ல வேண்டுமென தேவர்கள் இறைஞ்ச பிரம்மதேவன், "வரம் கேட்கையில் இராவணன் மனிதரைப் பற்றியும் விலங்குககளைப்பற்றியும் குறிப்பிட மறந்துவிட்டான். இதனால் இவனை வதம் செய்ய மஹாவிஷ்ணு மானுடராக அவதாரம் செய்தாலே இயலும் என்று கூறவே தேவர்கள் அனைவரும் மஹாவிஷ்ணுவைச் சரணடைந்தார்கள். தங்களுக்காக மானுடராக அவதாரம் எடுத்து இராவணனைக் கொன்று தங்களைக் காக்க வேண்டினர். நாராயணனும் தேவர்களுக்காக மனம் இரங்கி புத்திரபாக்கியம் வேண்டி யாகம் செய்யும் தசரதனுக்கு நான்கு குமாரர்களாக அவதரித்து, இராவணனைக் கொன்று தேவர்களுக்கு விடுதலை பெற்றுத் தருவதாக வரமளிக்கவே தேவர்கள் மிகவும் மகிழ்ந்து இறைவனைத் துதித்து வணங்கினர்.
ஆகிரா
No comments:
Post a Comment